ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் (AGM) மற்றும் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவும் கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள தபாலக கேட்போர் கூடத்தில் நாளை (27) சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் அல்ஹாஜ் என்.எம். அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ எம்.பி. பிரதம அதிதியாகவும், இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி கௌரவ அதிதியாகவும் முக்கியஸ்தர்கள் பலர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக போரத்தின் செயலாளராக, தலைவராகப் பதவி வகித்து, இதுகாலவரை மிகவும் சிறப்பாக அமைப்பை நடாத்திச் சென்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் என்.எம். அமீன் இம்முறை போட்டியிடவில்லை.
இந்த மாநாட்டின் போது முஸ்லிம் மீடியா போரத்தின் நடப்பு ஆண்டுக்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெறவுள்ளது.
மிகவும் பரபரப்பானதும் விறுவிறுப்பானதுமான போட்டிக்கு மத்தியில் இம்முறை முஸ்லிம் மீடியா போரத்தின் அடுத்த ஆண்டுக்கான புதிய நிறைவேற்றுக் குழுவின்
தலைவர் பதவிக்காக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம். பைரூஸ், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் செய்தி வாசிப்பாளர் இர்ஷாட் ஏ காதர், ஊடகவியலாளர் எப்.எம். றிபாஸ், விடியல் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் ரிப்தி அலி ஆகிய நால்வர் போட்டியிடுகின்றனர். நான்கு தரப்பிலும் தலைவர் பதவிக்கான அடுத்த நகர்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்த தலைவர் யார் என்பது வாக்களிப்பு மூலமாக தெரிவு செய்யப்படவுள்ளது.
பொதுச் செயலாளர் பதவிக்காக ஊடகவியலாளர் எம்.எஸ்.பாஹிம், தினகரன் ஊடகவியலாளர் என்.ஏ.எம். ஸாதிக் ஷிஹான், ஊடகவியலாளர் திருமதி ஸமீஹா சபீர் ஆகிய மூவரும் போட்டியிடுகின்றனர். பொருளாளராக கியாஸ் ஏ புஹாரி போட்டியின்றி ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, நிறைவேற்று குழுவுக்கு 15 பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 30 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதுடன் இதற்கான தெரிவும் பொதுக்கூட்டத்தின் போது வாக்களிப்பு மூலம் இடம்பெறவுள்ளதாக நியமனக்குழு அறிவித்துள்ளது.
நிறைவேற்று குழுவிற்கு போட்டியிடுவோர் விபரம் பின்வருமாறு; என். ஆஷிக் முஹம்மத், கே. அப்துல் ஹமீத், ஏ.பி. அப்துல் கபூர், எம். அப்துர் ரஹ்மான், அஷ்ரப் ஏ. ஸமத், செல்வி அதீபா தௌஸீர், கே.அஸீம் முஹம்மத், எஸ்.எல். அஸீஸ், பரீட் இக்பால், எம்.எப்.எம்.பர்ஹான், எஸ்.ஏ.எம்.பவாஸ், ஏ.எச்.எம்.பௌஸான், ஏ.புஹாது, ஐ.எம்.இர்ஷாத், ஜெம்ஸித் அஸீஸ், ஜாவிட் முனவ்வர், யு.எல் மப்ரூக், எம்.ஐ.முஹம்மத் ரியாஸ், எஸ்.எம்.எம். முஸ்தபா, பீ.எம்.முர்ஷிடீன், எம்.ஏ.எம். நிலாம், எம்.ஐ.நிஸாம்டீன், ஏ.எல்.ஏ.ரபீக் பிர்தௌஸ், ஏ.கே.எம். ரம்ஸி, ஏ.சி.ரிஸாத், ரிஸ்வான் சேகு மொஹிடீன், எம்.எஸ்.எம். ரிஸ்வான், ஷிஹார் அனீஸ், எஸ்.என்.எம். சுஹைல் மற்றும் உமர் அரபாத் ஆகியோரே இம்முறை போட்டியிடவுள்ளதாக போரத்தின் பொதுச் செயலாளர் சாதிக் சிஹான் தெரிவித்தார்.
No comments