"எனது வீட்டுக்கான வீதியை அமைப்பதனை நிறுத்தி தேவையுடைய மக்களுக்காக அந்த நிதியை பயன்படுத்துங்கள்" நகரசபையில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கோரிக்கை!
காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு செல்லும் வீதியினை அமைப்பது, அவசரத் தேவை இல்லை என்றும் அதனை உடனடியாக நிறுத்தி, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை மக்களுக்கு அவசியமான வேறு வீதிகளை அமைப்பதற்காக பயன்படுத்துமாறும் நகரசபைத் தவிசாளரிடம் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கோரியுள்ளார்.
இது தொடர்பில் மின்னஞ்சல் மூலமாக இன்று(05.10.2020) தவிசாளர் அவர்களுக்கு பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"எனது வீட்டிற்குச் செல்லும் பாதையினை அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் வீதி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும், கடந்த 30ம் திகதி நடைபெற்ற அவசரக்கூட்டத்தின் போது அறிவித்திருந்தீர்கள். இதற்காக எனது நன்றிகள்.
இருப்பினும், நான் அச்சபைக் கூட்டத்தில் தெரிவித்தது போல அவ்வீதியானது, தனியார் வீதியாகும். இதில் தற்போது நான் உட்பட இரண்டு குடியிருப்பாளர்களே வசிக்கிறோம். அத்தோடு, இந்தப் பாதை ஓரளவு பயன்படுத்தக்கூடிய நிலையிலேயே இருக்கின்றது.
அந்த வகையில், அந்த வீதியை அமைப்பதென்பது அவசரமான முன்னுரிமைத் தேவை என நான் கருதவில்லை. எனவே, அவ்வீதியினை அமைக்கும் பணியை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அத்தோடு, எமது நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்னும் சில மணல் பாதைகள் காணப்படுகின்றன.
கடந்த 30ம் திகதி காலை முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள முஅத்தினார் வீதியில் உள்ள ஒரு ஒழுங்கையினை பார்வையிட்டு இருந்தேன். அதில் அடர்த்தியாக அதிகமான குடும்பங்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பலரும் வறுமையான நிலையில் உள்ளதாகவே தெரிகிறது. எனவே, அந்த ஒழுங்கையினை அமைப்பதென்பது ஒரு முன்னுரிமையான விடயம் என உணர்கிறேன். இது போன்ற இன்னும் பல வீதிகள் எமது பிரதேசத்தில் இருக்கும் என நம்புகின்றேன்.
எனவே எனது வீட்டுக்கு செல்லும் பாதையை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை அதுபோன்ற வேறு ஏதாவது ஒரு தேவைக்கு முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்தி கஷ்ட நிலையில் உள்ள மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து கொடுப்பதற்கு அந்த நிதியினை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்"
No comments