Header Ads

Header ADS

கலைஞர் சுவதம் விருது பெற்றார் பல்துறைக் கலைஞர் எம்.எஸ்.எம்.ஸாகிர்

(அஸ்லம் எஸ்.மௌலானா)
 
சாய்ந்தமருதைச் சேர்ந்த பல்துறைக் கலைஞர் எம்.எஸ்.எம். ஸாகிர் கலாசார, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞர் சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பிரதேச செயலகங்கள் ரீதியாக கலைஞர் சுவதம் விருதுக்காக தெரிவு செய்யப்பட்ட கலை, இலக்கிய மற்றும் எழுத்துத்துறைகளில் பங்காற்றிவரும் தமிழ் பேசும் கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று (08) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோது இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.றின்ஸானின் ஒருங்கிணைப்பில், அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் வேதநாயகம் ஜெகதீசனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், சாய்ந்தமருது பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச். சபீகா ஆகியோர் இணைந்து இவ்விருதினை வழங்கி வைத்தனர்.

நவமணிப்பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஊடகவியலாளராகப் பணியாற்றிய இவர், பாடசாலையில் படிக்கும் காலத்தில் இருந்தே கலை இலக்கியச் செயற்பாடுகளான கவிதை, நாடக நடிப்பு, பாடல், அறிவிப்பு, சிறுகதை ஆக்கம், படிப்பினையூட்டும் கதைகள், பொல்லடி (கோலாட்டம்), றபான் என பல்துறைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, பிரகாசித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.