Header Ads

Header ADS

Pyrolysis திட்டம்:


காத்தான்குடியில் அமைக்கப்படவிருக்கும் Pyrolysis திட்டம் தொடர்பான விரிவான கடிதம் ஒன்றினை நகர சபை தவிசாளர் அவர்களுக்கு பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அனுப்பி வைத்துள்ளார்.

எல்லோரும் கவனம் செலுத்த வேண்டிய பல முக்கிய அவதானங்களும், ஆலோசனைகளும் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதன் முழுமையான பிரதியும், அதனோடு தொடர்புபட்ட புகைப்படங்களும் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளன்.
நமது பிரதேசத்தைச் சேர்ந்த துறைசார் அறிவுள்ள சகோதரர்கள் உள்ளிட்ட அனைவர்களது ஆலோசனைகளும் பங்களிப்புகளும் அவசியப்படுகின்றன.
இக்கடிதத்தினை முழுமையாக வாசித்து உங்களது
பெறுமதியான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் நகரசபையோடு நேரடியாகவோ அல்லது பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் ஊடாகவோ பகிர்ந்து கொள்வீர்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Eng.அப்துர் ரஹ்மான் அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் பிரதி:
Engr. MM. அப்துர் ரஹ்மான்
நகர சபை உறுப்பினர்,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)
C B காசிம் வீதி ,
காத்தான்குடி 6.
03. 04.2021
தவிசாளர்,
நகரசபை,
காத்தான்குடி.
தவிசாளர் அவர்களுக்கு!
Pyrolysis திட்டம் தொடர்பான எனது அவதானங்களும் ஆலோசனைகளும்!
Pyrolysis திட்டம் தொடர்பாக கடந்த 30.03.2021 அன்ற விஷேட செயலமர்வொன்றினை ஏற்பாடு செய்தமைக்காக முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் போது இத்திட்டத்தை மேற்கொள்ளவுள்ள நிறுவனமான Olive Green International பிரதிநிதிகளோடும் நேரடியாக கலந்துரையாடியது மிகவும் பிரயோசனமாக அமைந்தது.
ரப்பர், பிளாஸ்டிக், பொலிதீன் போன்ற உக்காத கழிவுகளை அகற்றுவதற்கான நவீன தீர்வாக Pyrolysis நடைமுறை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
உக்காத இக்கழிவுகளை உயர் வெப்ப நிலையில் எரித்து சில நடைமுறைகளுக்கு(processes) உட்படுத்தி எரி பொருளாக பயன்படுத்தக் கூடிய எண்ணையினை உற்பத்தி செய்வதுவே இத்திட்டத்தின் அடிப்படையாகும். சூழலுக்கு மிகப் பாதகமாக அமையும் உக்காத கழிவுகளான பிளாஸ்டிக்-ரப்பர்- பொலித்தீன் கழிவுகளை கையாள்வதற்கான, பிரயோசனமான நவீன தீர்வாகவே இந்த நடை முறை கருதப்படுகிறது. அந்த வகையில் உங்களது முயற்சிகளும் பாராட்டுக்குரியது.

இருப்பினும், Pyrolysis மூலம் உருவாகும் காபன் கழிவுகளின் வெளியேற்றம் சூழலுக்கும் மனித சுகாதாரத்திற்கும் பெரும் அபாயமாக அமைகிறது. அத்தோடு பாதகமான சில இரசாயன வாயுக்களும் (HCL, H2SO4, HF) இதன்போது வெளியாகின்றன. மேலும், இந்த அமில வாயுக்கள் தொடர்ச்சியாக காற்றிலே கலக்கும் போது இயற்கையாக நமக்கு கிடைக்கும் சுத்தமான மழை நீர் அமில நீராக மாறிவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது. அந்த வகையில், இந்த கழிவு வெளியேற்றங்கள் சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பாக அமைவதோடு சுவாச நோய் உள்ளிட்ட பல்வேறு நோய் அபாயங்களுக்கும் காரணமாக அமைகிறது.
மக்கள் செறிந்து வாழும் இடமொன்றில் இத்திட்டம் அமையப் பெறும் போது இந்த அபாயங்கள் இன்னும் அதிகரிக்கிறது என்பதுவே அறிவியல்ரீதியான ஆய்வுகளின் முடிவாகும். அந்த வகையில், சன அடர்த்தி மிக்க நமதூரில் இத்திட்டத்தை அமைக்கும் போது எவ்வாறு இந்த சூழல்-சுகாதார அபாயங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதென்பதுவே நாம் கொண்டிருக்கும் கேள்வியும் கரிசனையுமாகும்.
மக்களின் சுகாதார நலன்களை மையப்படுத்திய எமது இந்த கரிசனைகளை உங்கள் முயற்சிக்கான எதிர் நிலைப்பாடாக நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது எனது முதலாவது வேண்டு கோளாகும். கடந்த பல சபை அமர்வுகளில் உங்களது நல்ல பல முயற்சிகளுக்கு நாம் வழங்கி வரும் ஒத்துழைப்புக்களையும், அதேவேளை தவறுகளைச் சுட்டிக் காட்டும் போது நாம் கடைப்பிடித்து வரும் பொறுப்புடன் கூடிய அனுகுமுறைகளையும் நீங்கள் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன். இதற்கு சாட்சியாக ஏனைய சபை உறுப்பினர்களும் அதே போன்று நகர சபை செயலாளர் உட்பட ஏனைய அலுவலகர்களும் இருக்கிறார்கள்.
காத்தான்குடியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள Pyrolysis திட்டம் தொடர்பாக கடந்த செப்டம்பர் மாத சபை அமர்வில் நீங்கள் தெரிவித்த போதே முதன் முதலாக நான் இது பற்றி அறிந்து கொண்டேன். அன்றிலிருந்து, உக்காத கழிவுகளை கையாள்வதற்கான நமது அக்கறையினை விடவும் உயிர்வாழும் நமது மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் அக்கறையே மேலானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மிக உன்னிப்பாக இத்திட்டம் தொடர்பான விடயங்களை அவதானித்தும் ஆராய்ந்தும் வருகின்றேன்.
அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாத சபை அமர்வில் இத்திட்டம் தொடர்பாக நீங்கள் கூறியபோது , இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தக் கூடிய ஒன்று என்பதற்கான உதாரணமாக நிந்தவூரில் ஏற்கனவே அமுல் படுத்தப்பட்டிருக்கும் Pyrolysis திட்டத்தினைப் பற்றியும் கூறினீர்கள். இதனைப் பார்வையிட வேண்டும் என முதலில் முடிவு செய்தேன். அந்த வகையில் நிந்தவூரின் முன்னாள் தவிசாளரோடு தொடர்பு கொண்டு அவரையும் அழைத்துக் கொண்டு சென்று இத்திட்டத்தை பார்வையிட்டேன்.
அதன்போது இரண்டு விடயங்கள் என் கவனத்தை ஈர்த்தன.
1. நிந்தவூரில் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் இருந்து 4.2kmக்கு அப்பால் அமைந்துள்ள தனிமைப்பட்ட பகுதியிலேயே இது அமைந்துள்ளது.
2. இதன் மூலம் வெளியேற்றப்படும் காபன் கழிவுகள் அந்தப் பகுதியில் கரிக் கும்பங்களாகவும் திட்டு திட்டுக்களாகவும் காணப்படுகின்றன. (புகைப்படங்களையும் இணைத்துள்ளேன்). மக்கள் வாழாத அப்பிரதேசத்திலும் கூட இத்திட்டத்தின் மூலமாக வெளியேறும் காபன் கழிவுகள் சூழலுக்கு பெரும் பாதிப்பாக உள்ளதாகவும் இதனைக் கையாள்வது பெரும் சவாலாக இருப்பதாகவும் எல்லோரும் தெரிவித்தார்கள்.

இந்த அவதானங்கள் பற்றி சபை அமர்வொன்றில் சுட்டிக்காட்டினேன். இதற்குப் பதிலளித்த நீங்கள், 'டயர்களை எரிப்பதனாலேயே இது ஏற்படுவதாகவும், இதனால் இங்கு காத்தான்குடியில் டயர்களை எரிக்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது' எனவும் தெரிவித்தீர்கள். அவ்வேளை ஏற்கனவே (நானில்லாத சபை கூட்டத்தின்போது) மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி டயர்களையும் எரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதனை சுட்டிக் காட்டினேன். அப்போது 'டயர்கள் எரிப்பதனை தடுக்கும் வகையில் அத்தீர்மானத்தை மாற்றுவோம்" என கூறப்பட்டது. OliveGreen நிறுவனத்துடன் நகர சபை மேற்கொண்ட ஒப்பந்தத்திலும் இந்த நிபந்தனை உள்வாங்கப்படும் எனவும் சபைக்கு அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் நகல் பிரதியினை முழுமையாக படித்துப் பார்த்த போது 'டயர்கள் எரிக்கப்படக் கூடாது' என்ற நிபந்தனை உள்வாங்கப்படவில்லை. மாறாக, ஒப்பந்தத்தின் 10 ஆவது சரத்தில் 'ரப்பர் உட்பட பொலிதீன் கழிவுகளை எரிப்பதற்காக நகரசபை தொடர்ச்சியாக அவற்றை சேகரித்து வழங்க வேண்டும்' என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி, கடந்த 30ம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் நான் சுட்டிக்காட்டிய போது இதற்கு சாதகமான எந்ந பதிலையும் நீங்கள் அளிக்கவில்லை. Olive Green நிறுவனமும் வழங்கவில்லை. மாறாக டயர்களும் சேகரிக்கப்படும் என்பதனையே அந்நிறுவனத்தின் பிரதிநிதி உறுதிப்படுத்தினார்.
டயர்- றப்பர்கள் எரிக்கப்படாத போதிலும்கூட pyrolysis மூலமாக வெளியேறும் கழிவுகளின் அபாயம் இருக்கவே செய்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
மேலும், இத்திட்டம் தொடர்பாக நகர சபையில் காணப்படும் ஆவணங்களை படித்துப் பார்த்ததன்படி பின்வரும் அவதானங்களையும் பெறமுடிந்தது.
1. Olive Green என்ற இதே நிறுவனத்தின் மூலமாக குண்டசாலையில் இத்திட்டம் அமைக்கப்படுவது பற்றி சிலாகித்துக் கூறப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கும் நான் விஜயம் செய்து பார்த்தேன். அதுவும் கூட மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதியில் இருந்து 4 kmக்கு அப்பாற்பட்ட தூரத்திலேயே அமையப் பெற்றுள்ளது. ஆக, மக்கள் வாழாத தனிமைப்பட்ட பிரதேசங்களிலேயே இது போன்ற திட்டங்கள் அமையப் பெற்றுள்ளதனை அவதானிக்க முடிகிறது.
2. காத்தான்குடி போன்ற சன அடர்த்தி மிக்க பகுதிகளில் இத்திட்டம் அமைக்கப்படும் போது சூழல்-சுகாதார விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு எந்த நடைமுறையும் பின்பற்றப்பட்டதாக எந்த ஆவணங்களையும் காண முடியவில்லை.
3. இது தொடர்பில் மட்டக்களப்பு பிராந்தியத்திற்கான மத்திய சூழல் அதிகார சபை ( Central Environmental Authority) அலுவலகத்தோடு தொடர்பு கொண்டேன். காத்தான்குடி பிரதேசத்தின் சனத் தொகை அடர்த்தி மற்றும் இத்திட்டம் காரணமாக ஏற்படும் சூழல்- சுகாதார பிரச்சினை பற்றியும் அவர்களுக்கு எடுத்துக் கூறினேன். நம் நாட்டில் காத்தான்குடி போன்ற சன அடர்த்தி மிக்க பகுதியில் வேறு எங்காவது இது போன்ற ஒரு திட்டத்தை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதா என வினவினேன். இல்லையென அவர்கள் பதிலளித்தார்கள்.
4. மத்திய சூழல் அதிகார சபை ஒரு திட்டத்துக்கான அனுமதியை வழங்கும் போதும் அத்திட்டம் அமைந்துள்ள பிரதேசத்தோடு தொடர்புபட்ட ஏனைய பல அரச நிறுவனங்களின் ஆலோசனைகளையும் அனுமதிகளையும் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு நடந்ததாக ஆவணங்களில் காணக்கிடைக்கவில்லை.
மேலும், கடந்த 30.3.2021 அன்று நடை பெற்ற கலந்துரையாடலின் பின்னர் மேலும் சில அவதானங்கள் கிடைத்துள்ளன.
1. Olive Green நிறுவனமானது 2013 ஆம் ஆண்டு முதல் இயங்குவதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும் இது போன்ற திட்டமொன்றினை வேறெங்கும் இதுவரை அமைத்த முன்னனுபவம் அவர்களுக்கு உள்ளதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு இதில் எந்த முன் அனுபவமும் இல்லை என்பதனை நீங்களும் இன்றைய கூட்டத்தின் போது உறுதிப் படுத்தினீர்கள்.
2. காத்தான்குடி போன்ற சன அடர்த்தியுள்ள வேறு ஏதாவது பகுதிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா எனக் கேட்டபோது அவர்களால் உரிய பதில் அளிக்க முடியவில்லை. ஆக, காத்தான்குடி பகுதியில் இதனை அமைக்கும் போது செலுத்த வேண்டிய விசேட கவனம் எதனையும் இவர்களும் இதுவரை செலுத்தவில்லை என்பதனையே இது உறுதிப்படுத்துகிறது.
3. இவர்களது நிறுவனத்தில் சில பொறியியலாளர்கள்- துறைசாந்த நிபுணர்கள் இருப்பதாக ஆவணங்களில் காட்டப்பட்ட போதிலும் அவர்கள் பற்றி வினவப்பட்ட போது அவர்கள் எங்கோ வெளிநாட்டில் இருப்பதாகவே பதில் சொல்லப்பட்டது. ஆக, சூழல்-சுகாதார- தொழில் நுட்ப பிரச்சினைகள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய பதவி நிலைகளில் யாரும் இருப்பதாக தெரியவில்லை.
4. இத்திட்டத்திற்கான முதலீடு தொடர்பில் பல்வேறு முரண்பட்ட தகவல்களே தொடர்ந்தும் கிடைக்கின்றன. கடந்த செப்டம்பர் மாத சபை அமர்வின் போது 600 மில்லியன் செலவில் இது அமைக்கப்படும் என நீங்கள் தெரிவித்தீர்கள். அடுத்த மாத சபை அமர்வில் 700 மில்லியன் என இதனை குறிப்பிட்டீர்கள். கடந்த 30ம் திகதி கூட்டத்தின் போது குறித்த நிறுவனப் பிரதிநிதி 265 மில்லியன் முதலீடு செய்யப்படுவதாக தெரிவித்தார். நகரசபையில் உள்ள ஆவணங்களின்படி 48-60 மில்லியன் அளவில் செலவாகுமென தெரிவிக்கப்படுகிறது. முன்னுக்குப் பின் முரணான இந்த தகவல்களை பார்க்கும்போது முறையாக திட்டமிட்ட ஒரு செயல் திட்டமாக இதனை கருத முடியவில்லை.
5. . கழிவுகளிலிருந்து சக்தியினை தயாரிக்கும் ( waste to energy projects) திட்டங்கள் சில அண்மையில் இலங்கையிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டங்களோடு தொடர்புபட்ட நிபுணர்கள் சிலரோடு பேசிப் பார்த்தபோது Olive Green நிறுவனம் தொடர்பாக அவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. ஆக, இத்துறையில் எந்த முன்னனுபவமோ அல்லது முன் அறிமுகமோ இல்லாத ஒரு நிறுவனமாகவே இது இருக்கிறது.
6. இந்நிறுவனமானது சகல வளங்களையும் தொழில்நுட்ப அறிவினையும் கொண்ட நம்பகமான நிறுவனமாகவும் தெரியவில்லை. இவர்களுக்கென்ற முறையாக அமைந்த அலுவலகம் இருப்பதாகவும் தெரியவில்லை. இந்த நிறுவனத்துற்கென ஒரு வெப் தளம் கூட இல்லையென்பதை அறியும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.
மேலே சொன்ன அவதானங்களின் அடிப்படையில் நாம் ஆழமாக இவ்விடயத்தை ஆராயவேண்டிய அவசியத்தை உணர்கிறேன்.
அந்த வகையில், இதுபோன்ற திட்டங்களில் முன்னனுபவம் கொண்ட உயர் நிபுணர்களினது தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெறுவது அவசியமாகும். அதேபோன்று, சூழல் பொறியியல் துறையில் (Environmental Engineering) நிபுணத்துவம் கொண்ட பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஆலோசனைகளையும் பெற முடியும்.
அத்தோடு, நமதூரைச் சேர்ந்த துறை சார்ந்த அறிவுடையோரைத் தெரிவு செய்து ஒரு குழுவை நியமித்து அவர்களின் ஆலோசனை மற்றும் அங்கீகாரத்தின் அடிப்படையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை எனது உறுதியான ஆலோசனையாக முன்வைக்கின்றேன்.
இறுதியாக,
உக்க முடியாத கழிவுகளுக்கான நீண்டகாலத் தீர்வுகளை நாம் கண்டிப்பாகக் காண வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும், உயிர்களைப் பணயம் வைத்து அத்திட்டத்தை செய்ய முடியாது என்பதனை எவரும் மறுக்க மாட்டார்கள். நிலப் பற்றாக்குறை மற்றும் சன நெருக்கடி காரணமாக நமது மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் சுகாதார சூழல் அபாயங்களுக்கு மத்தியில் இத்திட்டமானது இன்னுமொரு அபாயமாக மாறிவிடக்கூடாது என்பதுவே எமது நிலைப்பாட்டின் அடிப்படையாகும்.
Smart City திட்ட விடயத்தில் நமது மக்களின் தகவல்களை பாதுகாக்கும் பொருட்டு, அவசரப்படாமல் ஏனைய வெளி நிறுவனங்களுக்கும் இதனைப் பாரப்படுத்தாமல் உள்ளூர் ஒருவரை கொண்டே இதனை செய்து முடிக்க வேண்டும் என நீண்ட காலம் காத்திருந்து தற்போது அதனைச் செய்வதாக நீங்கள் கூறினீர்கள். மக்களின் தகவல்களை பாதுகாக்கும் விடயத்தில் இவ்வாறு காட்டப்படும் அக்கறையினை விடவும் பல நூறு மடங்கு அக்கறை மக்களின் சுகாதாரத்தை-உயிர்களை பாதுகாக்கும் விடயத்தில் காட்டப்பட வேண்டும்.
இதன் பொருட்டு நமது பிரதேசத்தைச் சேர்ந்த துறைசார் அறிவுடையோரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே இந்த Pyrolysis திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனையும் நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
நான் முன்வைத்துள்ள நியாயமாக சிந்திக்க வேண்டிய அவதானங்கள் மற்றும் கரிசனைகளின் அடிப்படையில் துறை சார்ந்த நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெற்று பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
Engr. M M அப்துர் ரஹ்மான்
நகர சபை உறுப்பினர்.
பிரதிகள்:
1. உள்ளூராட்சி ஆணையாளர்-கிழக்கு மாகாணம்/ பிரதி ஆணையாளர்-மட்டக்களப்பு.
2. செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், நகரசபை காத்தான்குடி.
3. பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி
4. பொது வைத்திய அதிகாரி காத்தான்குடி.
5. சிவில் சமூக நிறுவனங்கள்.
6. துறை சார் பிரமுகர்கள், காத்தான்குடி

No comments

Powered by Blogger.