Header Ads

Header ADS

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு அமைச்சர் பீரிஸ் பாராட்டு

 2020 க.பொ.த உயர்தரப் பரீட்சை 22 நாள் பரீட்சைகளின் பின் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. 362,824 பரீட்சார்த்திகள் நாடெங்குமுள்ள 2648 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.


உயர்தரப் பரீட்சை கொரோனா வைரஸின் அநேக சிரமங்களுக்கு மத்தியில் இடம்பெற்றதாக இன்று ஊடக சந்திப்பில் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பரீட்சை தொடங்கியபோது 6 கொவிட்-19 தொற்று மாணவர்கள் பரீட்சை எழுதினர். இரு வார காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்தது. 568 மாணவர்கள் தனிமைப்படுத்தலின் கீழ் பரீட்சை எழுதினர். இவ்வாறு எண்ணற்ற சிரமங்களுக்கிடையே உயர்தர பரீட்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வேளையில் பரீட்சையை வெற்றிகரமாக நடத்த பங்களிப்பு செய்த பெற்றோர், பரீட்சைகள் ஆணையாளர், அதிபர்கள், ஆசிரியர்கள், தொடர்புபட்ட போக்குவரத்துத் துறையினர், உள்ளூராட்சி அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பின் காரணமாக ஒக்டோபர் 12ஆம்திகதி ஆரம்பிக்கப்பட்டமை தெரிந்ததே.

No comments

Powered by Blogger.