அறிவுத்தந்தை கலாநிதி சுக்ரி அவர்களின் மறைவானது, சமூகத்தில் மீள் நிரப்ப முடியாத இடைவெளியாகும்! -பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களின் அனுதாபச் செய்தி
கலாநிதி MAM.சுக்ரி அவர்களது மறைவுச்செய்தியானது,முழு நாட்டிற்குமே பேரதிர்ச்சியான ஒன்றாகும். அவர்களின் மறைவுச்செய்தியினைக்கேள்வியுற்று ஆழ்ந்த கவலை அடைந்தேன். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜியூன்.
அன்னாரது சமூகம்சார் முதன்மைச்சேவைகளில் பிரதானமானது,
ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக அவர் திகழ்ந்ததுடன் வாழ்நாள் முழுவதும் தலைமை வகித்து அதன் வளர்ச்சிக்காக பாடுபட்டமையாகும்.
கலாநிதி சுக்ரி அவர்களின் அறிவு சார் பங்களிப்பானது வார்த்தைகளால் அளவிடமுடியாதது.
வரலாற்று நூல்களையும் பல நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் சர்வதேச மன்றங்களுக்கும் சமர்ப்பித்த மாமேதை அவர்கள்.
கலாநிதி சுக்ரி அவர்கள் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவனாக திகழ்ந்ததுடன், பேராதெனிய பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் எடின்பரோ பல்கலைக்கழகங்களில் தனது உயர்கல்வியினைப்
பூர்த்தி செய்து கலாநிதி பட்டத்தினையும் பூர்த்தி செய்து கொண்டிருந்தார்கள்.
கலாநிதிப் பட்டம் பெற்று இலங்கைக்கு திரும்பிவந்த டாக்டர் சுக்ரி அவர்கள் அப்போதைய நிலையில் ஒரு சாதாரண மத்ரஸாவாக திகழ்ந்த ஜாமீஆ நளீமிய்யாவின் பணிப்பாளராக பதவிஏற்று அதனை வழிநடாத்தினார்கள். மிகுந்த எளிமையும், தூரநோக்கும் தன்னலமற்ற சமூக அக்கறையும் கொண்டு அதற்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த
கலாநிதி சுக்ரி அவர்களின் மறைவானது, அவர்களது குடும்பத்தினர்களுக்கு மாத்திரமன்றி,முழு சமுதாயத்திற்கும், சர்வதேசத்திற்கும்கூட பாரிய இழப்பாகும்.அன்னாரின் தியாகமும் அர்ப்பணிப்பும், முதிர்ச்சியும், பரந்துபட்ட அறிவும்,பல்துறைசார் அனுபவமும் இலகுவில் ஈடுசெய்யப்பட முடியாத ஒன்றாகும்.
உலகாதாய நோக்கங்களின்றி முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிற்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு மகத்தான மனிதராகவே மர்ஹும் சுக்ரி அவர்கள் திகழ்கின்றார்.
இலங்கை அறிவியற்துறை வரலாற்றில் மாபெரும் ஆளுமையாகவும், சமுதாயத்தின் புலமைச் சொத்தாகவும் ஓர் அறிவுப் பாரம்பரியத்தின் வரலாற்று சிற்பியாகவும் சமூக மறுமலர்ச்சியின் உதாரண புருஷராகவும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் கலாநிதி சுக்ரி அவர்கள்,.
யா அல்லாஹ்! எம்மைவிட்டும் மறைந்த கலாநிதி சுக்ரி அவர்களின் தூய்மையான சமூகப்பணிகளை அங்கீகரித்து அவர்களது குற்றங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதிகளில் அவர்களை வாழச்செய்வாயாக.
அன்னாரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments